தி.மு.க.வில் இருந்து விலகினார் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா

துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.


பழ.கருப்பையா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசியல் கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்பட்டு வருகிறது. விளம்பர ஏஜென்சிகள் அரசியல் கட்சிகளுக்குள் புகுந்துவிட்டன. தமிழகத்தில் கவர்ச்சியான மாயை மிகுந்த அரசியல் போக்கு தற்போது உள்ளது.

காமராஜர், ராஜாஜி, கலைஞர் போன்று தற்போது யாரும் இல்லை. கொள்கைகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். தமிழக அரசியல் வணிக நிறுவனம் அல்ல. மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு விளம்பர யுக்திகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகிறார்கள்.

ஜனநாயகம் மிகப்பெரிய அமைப்பாகும். தற்போது அயோக்கியத்தனம் ஜனநாயகத்தில் புகுந்துள்ளது. கூட்டணி என்ற பெயரில் ஜால்ரா கட்சிகள் பல இணைந்துள்ளன.

அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் மறைக்கிறார்கள். ஜனநாயகம் பாழ்பட்டு விட்டது.

எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுகளுக்கு தேர்தலின் போது நீ எத்தனை கோடி செலவு செய்வாய்? என்று நேர்காணலில் பேரம் பேசுகிறார்கள். கவுன்சிலர் சீட்டுகள் ரூ.50 லட்சம், ரூ.1 கோடி என பேரம் பேசப்படுகிறது. அவர்கள் பதவிக்கு வந்த பிறகு செலவழித்த பணத்தை எடுப்பதிலேயே குறியாக செயல்படுவார்கள். பொது சேவை என்பது குறைந்து விட்டது.

அரசியலில் அறிவாளிகளுக்கு இடமில்லை. பொதுக்குழுவில் விவாதங்கள் நடைபெறுவது இல்லை. தீர்மானத்தை முன்கூட்டியே எழுதி நிறைவேற்றுகிறார்கள்.

தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளேன். வேறு எந்த கட்சியிலும் இணையும் சூழல் தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்